26.5.09

வழித்துணை...

யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது...

19.4.09

மீறல்...

நீ பாதி நான் பாதி என நகர்ந்த பொழுதின்
சத்தியம் மீறி
பெரும் பொழுதாய் நீண்டு கிடந்தது பகல்.
இலையுதிர்ந்து நிறமிழக்கத் தொடங்கி இருந்தன மரங்கள்
நிறை கிணறுகள் தன் பெயர் தொலைத்து நின்றன
வெடித்துப் பிளந்த நிலங்கள் செடிகளை உண்ணத் தொடங்கின
உயிர்களின் சுவாசப் பைகளில் மட்டுமே மிச்சமிருந்தது காற்று
பொறுப்பது பேதமையென பொங்கியெழுந்த இரவு
பகலின் மீது போர் தொடுத்த வேளையில்
கொட்டத் தொடங்கியது மழை...

17.2.09

அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த ஹார்மோனிகா...

பூக்களை நனைத்துக் கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த
ஹார்மோனிகாவை முதன் முதலில்
வாசித்த பொழுது
வண்ணத்துப் பூச்ச்சியை
துரத்திச் செல்லும் சிறுவனைப் போல
பாய்ந்து சென்றது எனது இசை...
அழகா வாசிக்கிறடா என்றாள் அக்கா
கட்டியணைத்து முத்தமிட்டாள் அம்மா
நானும் உன்னை மாதிரி வாசிக்கிறேன் என்றான் தம்பி
அப்பா மட்டும் எதுவும் சொல்லவே இல்லை...

20.11.08

காதலைப் போல...

பால் வெளியில்
ஒரு வானமும் ஒரு நிலமும்
காதலிக்கத் தொடங்கின...

ஒன்றை ஒன்று
பார்த்துக் கொண்டே இருந்தன...

பெருகிய காதலில்
வானம் வண்ணம் கொண்டது...
நிலமோ பூத்துக் குலுங்கியது...

காலம் இப்படியாக
சென்ற ஒரு வெளியில்
பெரு ஊழியின் சூழ்ச்சியில்
பிரிந்தனர் காதலர்...

பசலை பெருக்கி
நிறம் தொலைத்து
நெடு நாட்கள்
தவித்தது நிலம்..

வண்ணம் தொலைத்து
வாடி நின்றது
வானம்...

பிரிவின் துயரம்
பெரு நோயாய்
வருத்த
நிறம் இழந்த வானம்
நீராய்
நிலம் புகுந்தது...

நீண்ட பிரிவின்
சந்திப்பில்
அணைத்துக் கொண்டனர்
காதலர் இருவரும்...

காதற் பெருக்கில்
நிறம் கொண்டன
நிலமும்...வானமும்...

எங்கும் வண்ணங்கள்...

அழகாய் மாறிப் போனது
இவ்வுலகம்...

அங்கு
அவனும் அவளும்
பார்த்துக் கொண்டனர்...

வானமும் நிலமும்
இன்னும் இருக்கிறது...
வண்ணமாய் இருக்கிறது...
அழகாய் இருக்கிறது...

அவர்களும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள்...

அழகின் வசத்தில்
அவனும் அவளும்...
வானமும் நிலமும்...


கள்ள மழையோ
தனக்குள் சிரித்துக் கொண்டது...

மழை...

அன்றும் நீராய்...
இன்றும் நீராய்...
என்றும் நீராய்...

காதலைப் போல...




காற்றின் முத்தமும் பெருமழையும்...

வாரி அணைத்து
உச்சி முகர்ந்த தாயாய்
காற்றின் முத்தம்...
ஈரம் உணர்ந்த
ஒரு பொழுதில்
பெய்யத் தொடங்கியது
பெரு மழை...

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...

16.11.08

முதல் மழையாய்...

யாவருக்குமான மழை
ஒவ்வொருவருக்கும்
ஒரு விதமாய்...


எனக்கு மட்டும்
முதல் மழையாய்...

27.10.08

அன்று ஒரு புதன் கிழமை...

அன்று ஒரு புதன் கிழமை

அடைமழைக் காலம்

மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம்

சாலையெங்கும் பூத்துக் கிடந்தன மஞ்சள் மலர்கள்

பர்தா அணிந்த பெண்ணொருத்தி

கடந்து சென்ற பேருந்தின் அடைத்த சன்னல்

திறந்த ஒரு இமைப் பொழுதில்

வெளிச்சம் சிதறி வானவில் ஆனது...

18.10.08

காகிதக் கப்பல்...

மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே
காகிதத்தை மடித்து அப்பா கப்பல் செய்யத் தொடங்குவார்
அம்மா சுடச் சுட தின்பதற்கு ஏதாவது செய்து தருவாள்
தம்பி ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு
தெறித்து விழும் மழை நீரை கையில் சேந்தி விளையாடுவான்
சாதா கப்பல் மட்டுமே செய்யத் தெரியும் அப்பாவுக்கு
அம்மா தான் கத்தி கப்பல் செய்து கொடுப்பாள்
பக்கத்து வீட்டு சுமதியும் மாடி வீட்டு கதிரும் நானும்
பெருகி ஓடும் மழை நீரில் கப்பல் விடுவோம்.
மகிழ்ச்சியை சுமந்து கொண்டு பயணம் போகும்
எங்கள் காகிதக் கப்பல்...

27.9.08

ஆனந்த தாண்டவம்...

பச்சை பூத்திருந்த மழைக் காடு

மினு மினுத்த கருப்பு மண்ணில்

ஆடல்வல்லானின் அழகிய காலில் 

சிக்குண்ட முயலகனாய் 

வண்ண மயிலின் வனப்பு பிடியில்

படையும் நடுங்கும் பாம்பின் நடனம்

விரித்த தோகையின் ஆயிரம் கண்களிலும்

உமையின் உக்கிரம்...

கொண்டல்கள் கூடிய கொற்றவை காட்டில்

அகவும் மயிலின் ஆனந்த தாண்டவம்...